கியா நிறுவனம் இன்று இந்தியாவில் தனது புதிய சிரோஸ் காம்பாக்ட் எஸ்யூவியை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. இது EV9 மாதிரியான பெரிய கியா மாடல்கள் போன்ற வடிவமைப்பை கொண்டது, மேலும், இந்த வாகனம் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த SUV ஆனது HTX+(O), HTX+, HTX, HTK+, HTK(O) மற்றும் HTK ஆகிய ஆறு வகைகளைக் கொண்டிருக்கும். இந்தியாவில் கியா சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து பலருக்கும் ஃபேவரைட்டான வாகனமாக இது அறிமுகமாகியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது கியா நிறுவனம். இதன் முன்பதிவு ஜனவரி 3ம் தேதி தொடங்கி, 2025 பிப்ரவரி முதல் டெலிவரிகள் தொடங்கும் என அறிவிதுள்ளனர்.
கியா சிரோஸ்: வடிவமைப்பு
கியா சிரோஸ் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வாகனத்தின் முன்பக்கத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் DRLs விளக்குகள் மற்றும் வலுவான தோற்றமுடைய பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் வடிவமைப்பு கியா பிராண்டின் பிரீமியம் எலக்ட்ரிக் SUV, EV9 மாடல்களை ஒத்திருக்கிறது. வாகனத்தின் பக்க விவரம் உயரமான, நிமிர்ந்த வடிவத்தைக் காட்டுகிறது. கூடுதலாக, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த பிராண்டில் புதிய அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வண்டியின் பின்பக்கம் என்று பார்க்கும்போது, எல்-வடிவ எல்இடி டெயில் விளக்குகள் பின்புறத்தில் மிகவும் உயரமாக பொறுத்தப்பட்டுள்ளன. வண்டியின் நீளம் 3,995 மிமீ, அகலம் 1,800 மிமீ மற்றும் உயரம் 1,665 மிமீ. வீல்பேஸ் 2,550 மிமீ அகலத்தில் உள்ளது. இது கியா சோனெட்டை விட கூடுதலாக 10 மிமீ அகலமும் 55 மிமீ உயரமும் கொண்டிருக்கிறது. மேலும் வீல்பேஸ் 50 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. பூட் ஸ்பேஸ் 465 லிட்டராக மதிப்பிடப்பட்டுள்ளது. கியா Syros மொத்தம் எட்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
கியா சிரோஸ் இன்டீரியர் மற்றும் அம்சங்கள்:
சிரோஸின் கேபின் முற்றிலும் புதிய அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் நடுவில் 30-இன்ச் பனோரமிக் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆஃப் சென்டர் லோகோவுடன் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐந்து இருக்கை அமைப்பைக் கொண்ட இந்த வாகனத்தில் நல்ல பயண அனுபவத்தை வழங்கும் வகையில் பனோரமிக் சன்ரூஃப் பொறுத்தப்பட்டுள்ளது.
சிரோஸ் காம்பாக்ட் எஸ்யூவி
இந்த SUV-யில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, வென்டிலேட்டட் சீட்ஸ், பவர் டிரைவர் சீட், வயர்லெஸ் சார்ஜர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ளைமேட் கன்ட்ரோல், ஏசி கட்டுப்பாடுகளுக்கான பிரத்யேக ஸ்கிரீன், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 60:40 ஸ்பிலிட் சீட்ஸ், மற்றும் ஆம்பியண்ட் லைட்ஸ் என பல அம்சங்களுடன், பாதுகாப்பிற்காக, பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்புடன் கூடிய 360 டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், லெவல் 2 ADAS என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
கியா சிரோஸ் இன்ஜின், கியர்பாக்ஸ் விவரக்குறிப்புகள்:
கியா சிரோஸ் 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க்கையும் உருவாக்கும் வகையில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது, மேலும் 113 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விருப்பத்தையும் கொண்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
கியா சிரோஸ் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்:
கியா தனது புதிய சிரோஸ் காரின் விலையை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3 எக்ஸ்ஓ, மாருதி பிரெஸ்ஸா மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா கைலாக் போன்ற பிற சிறிய எஸ்யூவிகளுடன் போட்டியாக களமிறங்குகிறது. ஜனவரி 3 முதல் முன்பதிவு தொடங்கும், பிப்ரவரி தொடக்கத்தில் டெலிவரி தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது கியா. குறிப்பாக இதன் விலை சுமார் 9 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.