இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான இண்டிகோ, மாணவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடிச் சலுகைகளை அறிவித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் அதன் இணையதளம் மற்றும் செயலி மூலம் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளை வழங்குகிறது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் இந்த முயற்சி, படிப்பிற்காக பயணிக்கும் மாணவர்களுக்காக உதவுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை மூலம் அவர்கள் சிறிது பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சலுகையின் கீழ், மாணவர்கள் தங்கள் விமான முன்பதிவை எந்தவித மாற்றக் கட்டணமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம். மாணவர்களின் மாறும் கால அட்டவணையை மனதில் கொண்டு இந்த விமான சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, அடிப்படை கட்டணத்தில் 6 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் லக்கேஜ்களில் 10 கிலோ பேக்கேஜ் சலுகை வசதியைப் பெறுவார்கள். கூடுதல் புத்தகங்கள் அல்லது பாடப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய மாணவர்களுக்கு இது சிறப்பாக இருக்கும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்காக செல்லுபடியாகும் மாணவர் அடையாள அட்டையை செக்-இன் நேரத்தில் காட்ட வேண்டும். சரியான அடையாள அட்டையைக் காட்டவில்லை என்றால் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சலுகை உள்நாட்டு விமானங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த சலுகைகளை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. இண்டிகோவின் இணையதளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இண்டிகோவின் இணையதளத்தில் நேரடியாக முன்பதிவு செய்தால் 15% வரை தள்ளுபடி பெறலாம். இந்த சலுகையின் மூலம், இண்டிகோ நிறுவனம் மாணவர்களுடனான தனது உறவை மேம்படுத்த முயற்சி எடுத்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் இதுபோன்ற பல்வேறு சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து அறிவித்து வருகிறது. இதன் மூலம் பயணிகள் குறைந்த செலவில் விமானப் பயணம் செய்ய முடிகிறது. தற்போது மாணவர்களைக் கவரும் வகையில் இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.