சமையல் என்பது ஒரு கலை. பிடித்த உணவுகளைப் பிடித்தவாறு சாப்பிட வேண்டும் என அனைவரும் விரும்புவோம். ஆனால் என்ன? வழக்கம் போல சாம்பார், வத்தல் குழம்பு, சிக்கன், மட்டன் மற்றும் முட்டை குழம்பு என செய்து சாப்பிடுவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழம்புகள் வைத்தாலும் ஒரு மாதிரியாக செய்து சாப்பிடும் போது சளிப்பாகிவிடும். காரசாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் முட்டை ஆம்லேட் கறி செய்து சாப்பிடுங்க. நிச்சயம் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
முட்டை ஆம்லேட் கறி ரெசிபி:
தேவையான பொருட்கள்:
முட்டை – 4
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
வெங்காயம் – 3
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
தக்காளி – 2
தேங்காய் பால் – அரை கப்
கரம் மசாலா தூள் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
முட்டை ஆம்லேட் கறி செய்முறை:
காரசாரமான முட்டை ஆம்லேட் கறி ரெசிபி செய்வதற்கு முதலில், கடாயை சூடேற்றி 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை 2-3 நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ளவும்.
முன்னதாக ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள முட்டைகளை உடைத்து போட்டு மிளகாய் தூள், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.
பின்னர் வதக்கி வைத்துள்ள வெங்காயத்துடன் முட்டைகளை ஊற்றி சிறிது நேரம் கிளறி விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனுடன் சீரகத்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும். இறுதியாக முன்னதாக செய்து வைத்துள்ள ஆம்லேட் கறியை கிரேவியில் சேர்த்து சில நிமிடங்கள் அப்படியே மூடி வைத்துவிடவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகளை ஆம்லேம் கறி குழம்பில் சேர்த்து கிளறிவிட்டால் போதும், சுவையான மற்றும காரசாரமான முட்டை ஆம்லேட் கறி ரெடி.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம். சுவையோடு ஆரோக்கியம் நிறைந்த ரெசிபியாகவும் நிச்சயம் இருக்கும். குறிப்பாக முட்டையில் உள்ள கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் முதல் வரை அனைவரின் உடல் நலத்திற்கு ஏற்றதாக அமைகிறது. அப்புறம் என்ன இனி என்ன குழம்பு அல்லது கிரேவி செய்யலாம்? என்ற குழப்பம் எதுவும் இல்லாமல் முட்டை ஆம்லேட் கறி ரெசிபியை ட்ரை பண்ணிப்பாருங்கள்.