ஐயப்பனின் அறுபடை வீடுகளில் சபரிமலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது படைவீடாக சொல்லப்படுவது அச்சங்கோவில். அச்சன்கோவில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோவில் தமிழகத்தின் செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
மேக்கரை, மணலாறு, கும்பாவுருட்டி அருவியை கடந்து அச்சன் கோவிலுக்கு வந்தடையலாம். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட ஐந்து கோவில்களில் அச்சங்கோவில் சாஸ்தா கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயப்பனின் இருபுறமும் பூர்ணா, புஷ்கலை என இரு தேவியர்கள், மலர் தூவிய நிலையில் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். மேலும் தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சபரிமலைக்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் உற்சவம் நடக்கும் ஐயப்பன் கோவில் அச்சன் கோவில் என்பது சிறப்பு கூறியது. கார்த்திகை, மகரஜோதி, சித்திரை விசு ஆகிய திருவிழாக்கள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதத்தை ஒட்டி, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை தருகின்றனர். மேலும் கார்த்திகை மாதத்தை ஒட்டி மாலை நேரங்களில் கோவிலைச் சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட விளக்குகள் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களால் ஏற்றப்படுகிறது. அச்சன் கோவில் பக்தர்களின் வழிபாட்டிற்காக காலை 5 மணி முதல் ஒரு மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.இரவு நேரங்களில் தீப ஒளிகளால் மின்னும் அச்சன்கோவில் ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா மட்டுமன்றி தமிழகத்தில் இருந்தும் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.