சபரிமலை ஐயப்பனை பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அமர்ந்திருக்கும் சன்னதிக்கு முன் அமைந்திருக்கும் 18 படிகள் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் பலருக்கும் தெரியாது. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக அற்புதமான விஷயங்களில் இந்த 18 படிகளின் சிறப்புகளும் ஒன்று.
தனிச்சிறப்பு வாய்ந்த ஐயப்ப விரதம் :
எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பாக சபரிமலை ஐயப்பன் மட்டுமே 18 படிகள் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அதே போல் சபரிமலையில் மட்டும் மாதத்திற்கு ஒரு மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுவதும், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழா நடத்தப்படும் வழக்கமும் உள்ளது. அனைத்து தெய்வங்களுக்கு விரதம் இருந்தாலும் சபரிமலை ஐயப்பன் விரதமே மிக நீண்ட காலம் இருக்கும் விரதமாக உள்ளது. அதே போல் விரத கட்டுப்பாட்டு முறைகளும் சபரிமலை ஐயப்ப விரதத்திற்கு தான் அதிகம்.
சிவ-விஷ்ணுவான ஐயப்பன்…!! :
ஒவ்வொரு தெய்வத்தின் அவதாரமும் ஒரு நோக்கத்திற்காக நிகழ்த்தப்பட்டதாகும். அவைகளில் சபரிமலை ஐயப்பன் மற்றும் முருகப் பெருமானின் அவதாரங்கள் மட்டுமே தனித்துவமானவை. பெண்ணின் துணை இல்லாமல் ஆணின் (சிவனின்) நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்தவர் முருகப் பெருமான். அதே போல் சிவன் – விஷ்ணு என்ற இரு ஆண்களுக்கு பிறந்த குழந்தை ஐயப்பன். முருகப் பெருமானை சிவ-சக்தி ஐக்கியம் என்றும், ஐயப்பனை சிவ-விஷ்ணு ஐக்கியம் என்றும் சொல்லுவதுண்டு.
புனிதமான 18 படிகள் :
சபரிமலை என்றதுமே நினைவிற்கு வருவது 18 படிகளும், அதன் மீது கோவில் கொண்டு அமர்ந்திருக்கும் சுவாமி ஐயப்பனின் தவக்கோலம் ரூபமும் தான். சபரிமலை பயணத்தின் மிக முக்கியமான விஷயமாக கருதப்படுவதும் தங்க தகடுகளால் போர்த்தப்பட்ட இந்த புண்ணியமான 18 படிகள் ஏறுவது தான். பிறவி பயனை அடைந்து விட்டதாக ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் நினைத்து மெய் சிலிர்க்கும் விஷயம் இது. இந்த 18 படியை அனைவரும் ஏறி விட முடியாது. இதில் ஏறுவதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளது. மாலை அணிந்து, இருமுடி சுமந்து வருபவர்கள் மட்டுமே இந்த 18 படியில் ஏறிச் சென்று, ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மாலை அணியாமலும், இருமுடி இல்லாமல் வரும் பக்தர்கள் வேறு வழியாக மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனமதிக்கப்படுவார்கள்.
18 படிகளின் ரகசியம் என்ன?
பொதுவாகவே ஆன்மிகத்தில் 9, 18 ஆகிய எண்களுக்கு சிறப்புகள் அதிகம். அதிலும் சபரிமலையில் இருக்கும் 18 படிகளுக்கு சிறப்புகள் இன்னும் அதிகம். மாதந்தோறும் சபரிமலை நடை திறக்கப்படும் போதும் ஐயப்பனுக்கு மட்டுமல்ல, இந்த 18 படிகளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. சபரிமலையில் நடக்கும் மிக காஸ்ட்லியான பூஜை, இந்த படி பூஜை தான். 2040 ம் ஆண்டு வரை இந்த படிபூஜை செய்வதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே முடிந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஐயப்பன் எதற்காக 18 படிகள் மீது அமர்ந்திருக்கிறார்? இந்த 18 படிகள் எதை குறிக்கின்றன? எதற்காக 18 படி ஏறி செல்வது இவ்வளவு உயர்வாகவும், முக்கியமானதாகவும் கருதப்படுகிறது? 18 படிகளின் ரகசியம் என்ன?
18 படிகளின் தெய்வாம்சம் :
- முதல் படி – சூரியன
- 2ம் படி – சிவன்
- 3ம் படி – சந்திரன்
- 4ம் படி – பராசக்தி
- 5ம் படி – செவ்வாய்
- 6 ம் படி – முருகன்
- 7ம் படி – புதன்
- 8ம் படி – மகாவிஷ்ணு
- 9ம் படி – குரு பகவான்
- 10ம் படி – பிரம்மா
- 11ம் படி – சுக்கிரன்
- 12ம் படி – திருவரங்கன்
- 13ம் படி – சனீஸ்வரன்
- 14ம் படி – எமதர்மன்
- 15ம் படி – ராகு
- 16ம் படி – காளி
- 17ம் படி – கேது
- 18ம் படி – விநாயகர்
18 படிகள் குறிப்பது :
- முதல் படி – மெய்
- 2 ம் படி- வாய்
- 3 ம் படி- கண்
- 4 ம் படி – மூக்கு
- 5 ம் படி – செவி
- 6 ம் படி – காமம்
- 7ம் படி – குரோதம்
- 8ம் படி – மோஹம்
- 9ம் படி – மதம்
- 10ம் படி – மாச்சரியம்
- 11ம் படி – லோபம்
- 12ம் படி – டம்பம்
- 13ம் படி – அசூயை
- 14ம் படி – ஸத்வம்
- 15ம் படி – ராஜஸம்
- 16ம் படி – தாமஸம்
- 17ம் படி – வித்யை
- 18ம் படி – அவித்யை
“குருசாமி” என்று அழைக்க என்ன காரணம் :
மனிதன் அடக்கி, கடந்து வர வேண்டிய விஷயங்களான ஐம்புலன்கள், ஐம்பொறிகள், உணர்ச்சிகள், 3 குணங்கள், ஞானம், அஞானம் ஆகிய 18 விஷயங்களை தான் இந்த 18 படிகள் குறிக்கின்றன. எவர் ஒருவர் உண்மையான பக்தியுடன், முறையாக விரதம் இருந்து, விரத காலத்தில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் இந்த நியதிகளை கடைபிடிக்கிறாரோ அவர் வாழ்க்கையில் படிப்படியாக உயர்வார். மனிதனுக்கு பாவங்களை சேர்க்கும் இந்த 18 விஷயங்களை கடந்தால் சென்றால் பரம்பொருளை, மோட்சத்தை, இறை நிலையை அடைய முடியும் என்பதே இந்த 18 படிகள் உணர்த்தும் தத்துவமாகும். அதனால் தான் 18 ஆண்டுகள் சபரிமலை பயணத்தை நிறைவு செய்தவர்களை குருசாமி என்கிறார்கள். குருவின் குருவாக விளங்குபவன் சுவாமி ஐயப்பன். அவனுக்கு நிகரான தன்மை கொண்டவராக குருசாமி மதிக்கப்படுகிறார்.