சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவோருக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்ட ’சுவாமி சாட்பாட்’ (Swamy chatbot) செயலி பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் எழுதியிருந்த கடிதத்தில், தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்ய சுவாமி சாட்போட் என்ற வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த செயலியின் மூலம் அவசர உதவிகள் தேவைப்படும்போது, 6238008000 என்ற எண்ணுக்கு hi என குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக உதவிகள் கிடைக்கும்.
அதாவது, காவல் துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், வன அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதேபோல, ஐயப்பன் கோயில் திறந்திருக்கும் நேரங்கள், பூஜை நேரங்கள், அருகிலுள்ள கோயில்கள், தங்குமிடங்கள், மருத்துவம், உணவகங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய தகவல்களையும், கேரள மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் வந்து செல்லும் நேரங்களையும் எளிதில் அறிந்துகொள்ள முடியும் என்றும் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.