சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்கான சீசன் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து இருமுடி சுமந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சபரிமலையில் எந்நேரமும் சரணம் ஐயப்பா கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கேரள மாநில அரசும் தேவசம்போர்டும் இணைந்து பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த 30 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பம்பை ஆற்றில் இறங்க அனுமதி:
சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சபரிமலை அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பம்மை நதியில் குளிக்கவும், கடந்து செல்லவும், துணிகளை அலசவும் தடை விதித்து பத்தனம்திட்டா ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கனமழை முன்னறிவிப்பு மாறியதை அடுத்து சபரிமலை பக்தர்கள் பம்பை ஆற்றில் இறங்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இருப்பினும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் போலீஸார் ஆற்றின் இரு கரைகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
ப்ரீ பெய்டு டொலி சர்வீஸ்:
இதனிடையே சபரிமலை பக்தர்களுக்கான டோலி கேரியர்களுக்கான ப்ரீ பெய்ட் சேவை முறையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பம்பை, நீலிமலை, வலிய நடப்பந்தல் ஆகிய இடங்களில் சேவை மையங்களில் ப்ரீபேய்டு டோலி சேவைக்கான மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற நேரிலோ அல்லது ஆன்லைனிலோ பணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரீ பெய்டு டோலி சர்வீஸ் டாரிஃப்:
இதற்கான டாரிஃப்பையும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதன்படி 80 கிலோ வரை எடையை சுமக்க 4,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. 100 கிலோ வரை 5000 ரூபாயும் 100 கிலோவுக்கு மேல் 6,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவசம் போர்டு ஒரு சேவைக்கு 250 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 87 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.