அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிய தரிசன முறையை உருவாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தொடர்ச்சியாக பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி சென்றால் திருப்பம் ஏற்படும் என்பது பலரின் நம்பிக்கை. அதனால் வாழ்வில் திருப்பம் வேண்டி பக்தர்கள் பலரும் திருப்பதி செல்ல ஆவலுடன் காத்திருப்பார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலை பராமரித்து வருகிறது. திருப்பதி செல்லும் பக்தர்களின் நன்மைக்காக பல மாற்றங்களையும் முன்னேற்பாடுகளையும் அவ்வப்போது செய்து வருகிறது. பல காலங்களாக பக்தர்கள் சந்தித்து வரும் மாபெரும் பிரச்சினையாக இருப்பது வெங்கடாஜலபதியை தரிசிக்க பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பதே.
பல ஆண்டுகளாக, திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக முக்கிய காலங்களில், பக்தர்களின் காத்திருப்பு நேரம் 30 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. அதனை சரிசெய்ய பல மாற்றங்களை திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தி வருகிறது.
அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, புதிய தரிசன முறையை உருவாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி ஒரு மணிநேரத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய முடியும் என்கிறது தேவஸ்தானம்.
பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்ய ஏதுவாக AI தரிசன முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகிறதாம்.
அதன்படி, திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் முகத்தை AI நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்கேன் செய்து அவர்களுக்கு தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்படும். அதற்காக திருப்பதி விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையம், அலிபிரி உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் முகத்தை ஸ்கேன் செய்யும் மையம் அமைக்கப்பட உள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இந்த தொழில்நுட்பத்தில் தங்களது முகத்தை ஸ்கேன் செய்தால் அவர்களுக்கு தரிசன நேரம் வழங்கப்படும். குறிப்பிட்ட அந்த தரிசனத்துக்கு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக கோயிலுக்கு வந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் தரிசனத்துக்காக இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவதை தடுக்கவும், அவர்களுக்கு மரியாதைக்குரிய அனுபவம் கிடைக்கும் வகையிலும் இந்தப் புதிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. தற்போது டெமோவில் உள்ள இந்த திட்டம், இன்னும் 6 மாதத்தில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.