அஷ்டமி வழிபாடும், தேய்பிறை அஷ்டமி வழிபாடும் கால பைரவருக்கு மிகவும் ஏற்ற வழிபாடாகும். அதே போல் ஞாயிற்றுக் கிழமையில் வரும் ராகு காலத்திலும் பைரவரை வழிபடுவது மிக மிக சிறப்பானதாகும். இவர் அவதரித்த கால பைரவர் ஜெயந்தி அன்று எப்படி வழிபட்டால் தடைகள் நீங்கி, வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பைரவர் ஜெயந்தி :
சிவ பெருமானின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் கால பைரவர், கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த நாளை கால பைரவர் ஜெயந்தி என்றும், பைரவர் ஜெயந்தி என்றும், பைரவாஷ்டமி என்றும் அழைக்கிறோம். கார்த்திகை மாத தேய்பிறையில் வரும் அஷ்டமியும், மிருகசீரிஷம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் பைரவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பைரவர் சிவ பெருமானின் ஐந்தாவது அவதாரம் என சொல்லப்படுகிறது. பைரவர் பல வடிவங்களில் அருள் செய்கிறார். இருந்தால் அவற்றில் துன்பங்களை போக்கி, காக்கும் கடவுளாக கருதப்படுபவர் கால பைரவர் ஆவார்.
தீமைகளை அழித்து, பக்தர்களை காக்கும் கடவுளாக பைரவர் கருதப்படுகிறார். இவர் பக்தர்களின் பயங்களை போக்கி, விருப்பங்களை நிறைவேற்றி வைப்பவராகவும், தீய சக்திகளிடம் இருந்து காப்பவராகவும், தடைகள் நீக்கக் கூடியவராக கருதப்படுகிறார். வாழ்க்கையில் கடுமையான சூழலில் இருக்கக் கூடியவர்கள் கூட கால பைரவரை முறையாக வழிபட்டால் அவர்களின் தலையெழுத்தே மாறும் என சொல்லப்படுகிறது. அதிலும் கால பைரவர் அவதரித்த பைரவர் ஜெயந்தி 2024 நவம்பர் 23ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்வதால் பைரவரின் அருளால் வாழ்க்கையே மாறும்
பைரவர் ஜெயந்தியில் செய்ய வேண்டியவை :
மந்திரங்கள் :
பைரவர் அவதரித்த பைரவர் ஜெயந்தி அன்று கால பைரவருக்கு உரிய பைரவர் மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறந்தது. கால பைரவரை மனதார வேண்டிக் கொண்டு, அவரின் கால பைரவர் அஷ்டோத்திரம், அஷ்டகம் அல்லது ஓம் காலபைரவாய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. இது எதிர்மறை விஷயங்களை நீக்கி, மனதில் தைரியத்தையும், புதிய பலத்தையும் கொடுக்கும். எதையும் சமாளிக்கும் உத்வேகம் பிறக்கும். நோய்கள் தீர்ந்து உடல் ஆரோக்கியம் பெருகும்.
விளக்கு :
கடுகு எண்ணெய் கால பைரவருக்கு மிகவும் விருப்பமானதாகும். பைரவரின் அவதார தினம் மற்றும் தேய்பிறை அஷ்டமி நாளில் கடுகு எண்ணெயால் பைரவர் சன்னதி அல்லது படத்திற்கு முன்பு கோவிலிலோ அல்லது வீட்டிலோ விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது. வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால், இரவு முழுவதும் இந்த விளக்கு எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இது எதிரிகள் தொல்லையை நீக்கும். பொருளாதார இழப்பை தடுக்கும். மனதில் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற் ஏற்படுத்து, குடும்பம் சுபிட்சமாக இருக்க அருள் செய்யும்.
நாய்களுக்கு தானம் :
கால பைரவரின் வாகனமான நாய்களுக்கு இந்த நாளில் உணவு அளிப்பது பைரவரின் அருளை பெறுவதற்கான மிகச் சிறந்த வழியாகும். நாய்களுக்கு பிரெட், பால், பிஸ்கெட், சாதம் போன்றவற்றை சாப்பிடக் கொடுப்பது நல்லது. இது கால பைரவரின் அருளை பெற்றுத் தருவதுடன், நம்முடைய கர்மவினைகளையும் குறைக்கும். அது மட்டுமின்றி எதிர்பாராமல் ஏற்படும் துன்பங்களில் இருந்தும் இது பாதுகாக்கும்.
காணிக்கை :
பைரவர் ஜெயந்தி அன்று பைரவருக்கு நடக்கும் அபிஷேகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். காணிக்கையாக தேங்காய், எலுமிச்சை ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த பலனை தரும். இது வாழ்க்கையில் இருக்கும் பயம், தடைகளை நீக்கி விடும். எலுமிச்சை மற்றும் தேங்காயை கறுப்பு நிற நூலில் மாலையாக கட்டியும் பைரவருக்கு அணிவிக்கலாம். இது எதிரிகள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும். அதே போல் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்களையும் ஈர்க்கும்.
தானம் வழங்க வேண்டியவை :
கருப்பு எள், கருப்பு உளுந்து அல்லது கருப்பு ஆடைகள் ஆகியவற்றை பைரவர் கோவிலுக்கு தானமாக வழங்கலாம். இது கடன் தொடர்பான பிரச்சனைகள், கிரக தோஷங்கள், வாஸ்துவால் ஏற்படும் குறைபாடுகள் ஆகியவற்றை போக்கும். வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நன்மைகள் நடைபெற வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு இந்த பொருட்களை பைரவருக்கு நடக்கும் பூஜைகளுக்காக வழங்குவது சிறந்தது.