பல்லி விழுந்தால் என்ன பலன் Palli Vilum Palan என்பது ஏறக்குறைய அனைவருக்கும் தெரியும். அப்படி தோஷம் ஏற்படும் வகையில் உடல் உறுப்புகளில் பல்லி விழுந்து விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த தெய்வத்தை வழிபட்டால் நமக்கு தீமைகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இறைவன் காட்டும் அறிகுறிகள் :
இறைவன் நேரில் வந்து பேச முடியாது என்பதால் நமக்கு வரும் நன்மை, தீமைகளை சில குறிப்புகள் மூலமே அறிவுறுத்துவார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. காகம் கத்துவது, பல்லி கத்துவது, உடலில் பல்லி விழுவது, காகம் தலையில் அடிப்பது என்பது போன்ற சில குறிப்பிட்ட அறிகுறிகளால் கடவுள் நமக்கு எச்சரிக்கை விடுப்பார். இவற்றின் பலன்களை கணித்து சொல்லுவதற்காக சில சாஸ்திர முறைகளே முந்தைய காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் பல்லி விழுவது.
ஆன்மிகத்தில் பல்லி வழிபாடு :
சாஸ்திர முறைப்படி மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் வழிபாட்டில் பல்லிக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. நாம் இறைவனிடம் முக்கியமான விஷயமாக முறையிடும் போது பல்லி சத்தமிட்டால் நம்முடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதற்கு கடவுள் ஒப்புதல் அளித்து விட்டார் என்று அர்த்தம். அது மட்டுமல்ல காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகியவற்றில் பல்லியின் உருவத்தை தொட்டு வணங்குவது முக்கிய வழிபாடாக உள்ளது. பல்லியை தொட்டு வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி, துன்ப நிலை மாறி, நன்மைகள் நடைபெற துவங்கும் என்பது நம்பிக்கை.
பல்லி விழும் பலன் :
நம்முடைய வீட்டில் இருக்கும் பல்லிகள் கத்தும் நேரம், திசை ஆகியவற்றை வைத்து பலன்கள் சொல்வார்கள். அது போல் பல்லி நம்முடைய உடலில் விழுவதற்கும் பலன்கள் உண்டு. இது ஆண், பெண் அனைவருக்கும் ஒன்றாக தான் இருக்கும் என்றாலும் உடலின் இடப்பாகம், வலப்பாகம் என்பதை பொறுத்து பலன்கள் மாறுபடும். பல்லி விழும் பலன்கள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பல்லி விழுந்து விட்டால் அதனால் தீய பலன்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க எந்த தெய்வத்தை வழிபட்டு, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
எந்த உறுப்பில் பல்லி விழுந்தால் தீயபலன் ஏற்படும்?
நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் பல்லி விழுந்த பலன்கள் ஏழு நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. பல்லி விழும் சாஸ்திரங்கள் சொல்லும் பலன்களின் அடிப்படையில் தலை, மூக்கு, புருவ மத்தியில், வாய், மேல் உதடு, கை, வலது மணிக்கட்டு, இடது கை விரல், இடது விலா எலும்பு, முகுது, மார்பு, தொடை, கால் விரல் நகங்கள், பாதம் போன்ற பாகங்களில் பல்லி விழுந்தால் அது அபசகுனமாக கருதப்படுகிறது. இவற்றில் விழுந்தால் தீய பலன்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
பல்லி விழுந்தால் வழிபட வேண்டிய தெய்வமும், பரிகாரமும் :
- தோஷம் அல்லது தீய பலன்களை தரக் கூடிய உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் உடனடியாக தலைக்கு குளித்து விட்டு, இஷ்ட தெய்வத்தை மனதார வழிபட வேண்டும்.
- வீட்டிற்கு அருகில் உள்ள சிவன், பெருமாள் அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
- அப்படி செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வைத்து வழிபடலாம்.
- இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் தீய பலன்கள் குறைந்து, நன்மைகள் அதிகரிக்கும்.
- முடிந்தவர்கள் காஞ்சிபுரம், திருச்சி, திருப்பதி ஆகிய கோவில்களுக்கு சென்று அங்குள்ள பல்லி உருவத்தை தரிசித்து வழிபட்டு விட்டு வரலாம்.