சங்கடஹர சதுர்த்தி விநாயகரை மனதார வழிபடுவதாலும், சில எளிய பரிகாரங்களை செய்து வருவதாலும் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். நாம் விநாயகரிடம் முன் வைத்த வேண்டுதல்களும் நிறைவேறும்.
சதுர்த்தி என்பது விநாயகருக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இது தேய்பிறையில் வரும் போது மிகவும் விசேஷமாக அதை சங்கடஹர சதுர்த்தி என சொல்லுவதுண்டு. அதிலும் நவம்பர் 19ம் தேதியான நாளை வரும் சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை மாதத்தில் செவ்வாய்கிழமையுடன் இணைந்து வருகிறது. செவ்வாய்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியை அங்காரக சங்கடஹர சதுர்த்தி என்றும், மங்களவார சங்கடஹர சதுர்த்தி என்றும் குறிப்பிடுவதுண்டு. இது மிகவும் விசேஷமான ஒரு நாளாகும்.
விநாயகப் பெருமான் முழுமுதற் கடவுள் மட்டுமல்ல. மிக எளிமையான கடவுளும் கூட. அவரை மனதார வேண்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்டு வழிபட்டாலே வேண்டும் வரங்களை உடனடியாக வழங்கக் கூடியவர். சிவன் மற்றும் முருகப் பெருமானுக்குரிய கார்த்திகை மாதத்தில் துன்பங்களை தீர்க்கும் விநாயகருக்கும் சங்கடஹர சதுர்த்தி வருவது மிக முக்கியமானதாகும்.
இந்த நாளில் மிக எளிமையான வழிபாட்டினை வீட்டில் செய்வதன் மூலம் பொன், பொருள் சேர்ந்து கொண்டே இருக்கும். நாம் விநாயகரிடம் முன் வைக்கும் கோரிக்கையும் அடுத்த ஒரு மாதத்திற்கும் நிறைவேறும்.
நவம்பர் 18ம் தேதி இரவு 10 மணி துவங்கி, நவம்பர் 19ம் தேதி இரவு 10 வரை சதுர்த்தி திதி உள்ளது. நவம்பர் 19ம் தேதி மாலை அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். இதில் கலந்து கொண்டு வழிபடலாம். விநாயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
எதுவும் முடியாதவர்கள் எளிமையாக தங்களின் கைகளால் அருகம்புல்லில் மாலை கட்டிக் கொண்டு போய் விநாயகருக்கு கொடுக்கலாம். பிறகு விநாயகரை மனதார வேண்டிக் கொண்டு, ஒரு முறை வலம் வந்து, சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டு விட்டு வரலாம். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தால் நம்முடைய துன்பங்களும் சிதறி ஓடி விடும் என்பது நம்பிக்கை.
பிறகு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, விநாயகருக்கு எளிமையாக அவல், சர்க்கரை, கற்கண்டு, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பிறகு ஒரே ஒரு சந்தன வில்லையை வாங்கி வந்து பன்னீர் அல்லது தண்ணீர் சேர்த்து கெட்டியாக உண்டை அல்லது தட்டை வடிவத்தில் பிசைந்து கொள்ளுங்கள்.
இதை வீட்டில் உள்ள விநாயகரின் படம் அல்லது சிலையின் வயிற்றுப் பகுதியில் ஒட்டி வைத்து விடுங்கள். அதன் மீது சில்லறை நாணயம் ஏதாவது ஒன்றை பதித்து வைத்து விடுங்கள். விநாயகர், துன்பங்கள், தடைகளை நீக்கும் கடவுள் மட்டுமல்ல, செல்வங்களையும் வழங்கக் கூடியவர். அவரது வயிற்றில் காசு வைப்பதால் அவர் குபேர விநாயகராக மாறி விடுவார்.
பிறகு விநாயகரிடம் ஏதாவது ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் நிறைவேற வேண்டிக் கொள்ளுங்கள். எந்த ஒரு காரியம் நடந்தால் அடுத்த ஒரு மாதத்தில் உங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும், உடனடியாக உங்களின் பிரச்சனை தீருமோ அதை மட்டும் நினைத்து அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு, கற்பூர ஆரத்தி காட்டி வேண்டிக் கொள்ளுங்கள்.
நைவேத்தியமாக படைத்த பொருளை அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும். மறுநாள், அதாவது புதன்கிழமையன்று காலையில் விநாயகரின் வயிற்றுப் பகுதியில் வைத்த சந்தனத்தை எடுத்து தனியாக வைத்து அதை தினசரி நெற்றியில் வைத்து வந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். அதே போல் அந்த நாணயத்தை பீரோ, பர்ஸ் போன்ற பணம் வைக்கும் இடத்தில் செலவு செய்யாமல் வைத்திருந்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். உங்களின் பணத் தேவைகளும் நிறைவேறும்.