வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமான், அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்திற்கு மத்தியில் அதன் வழியாக பிரவேசித்தார்.
ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்களுடன் ஆயிரங்கால் மண்டபலத்தில் எழுந்தருளிய நம்பெருமானை பக்தர்கள் மனமுருகி தரிசித்து வழிபட்டனர். இதேபோல், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில், அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள், சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து வழிபாடு நடத்தினர். இதற்கிடையே, மதுரையில் உள்ள பிரசித்திபெற்ற தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.