பொள்ளாச்சியில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தக்காளி காய்ச்சலால் பொள்ளாச்சி பகுதியில் பத்துக்கும் அதிக குழந்தைகள் தினமும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. காவாசகி இனத்தைச் சேர்ந்த வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சல், பெரும்பாலும் பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளையே குறி வைக்கிறது.
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உள்ளங்கை, உள்ளங்கால், -நாக்கு, உள்ளிட்ட பகுதிகளில் புண் மற்றும் அரிப்பு ஏற்பட்டு தொடர்ந்து காய்ச்சல் ஏற்படும். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல் குறையவில்லை எனில் மருத்துவரை அணுக வேண்டும் எனவும், நோய் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளை உடமைகளை தனிமைப்படுத்தி, சுத்தம் செய்த பின் பயன்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர் கை, கால்களை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். தக்காளி காய்ச்சலால் கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து பராமரிப்பதன் மூலம் மற்ற குழந்தைகளுக்கு இந்த நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். மேலும் இந்த தக்காளி காய்ச்சல் நோய் தொற்று குறித்து பள்ளி குழந்தைகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.