இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக சிறு வயதிலேயே உடல்நல பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்து விடுகின்றன. மோசமான பழக்க வழக்கங்களால், உடல்நல பிரச்சனைகளால், உடல் உறுப்புகள் பாதிக்க தொடங்குகின்றன. இந்நிலையில், நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் பிரச்சனை தொடர்பான ஆரம்ப அறிகுறிகளையும், அதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்பதையும், சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரக கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்:
சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நீர் சத்து பற்றாக்குறை. தண்ணீர் போதுமான அளவு குடித்தால், சிறிய அளவிலான கற்கள் சிறுநீர் மூலம் வெளியேறி, சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. சிறிய கற்கள் நாளடைவில் பெரியதாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலை கூட ஏற்படலாம். இதனால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், உணவின் மூலமே, சரி செய்து விடலாம் (Health Tips). இதற்கு அடுத்தபடியாக, அதிக அளவிலான உப்பு, உடலில் கழிவுகள் அதிகரித்தல், ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல் ஆகியவை காரணங்களாக உள்ளன.
சிறுநீரக கற்கள் இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி:
சிறுநீரக கல்லின் இயக்கத்தால் ஏற்படும் வலியை, சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்க்குழாய் வரை உணரலாம்.
சிறுநீரில் இரத்தம்:
சிறுநீர் பாதையில் கற்கள் உராயும் போது, ரத்த கசிவு ஏற்பட்டு, சிறுநீரில் கலப்பதால், சிறுநீர் நிறம் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறமாக இருக்கலாம்.
சிறுநீரில் நுரை:
சிறுநீரக கற்களால் சிறுநீரில் கழிவுகள் அதிகம் காணப்படும். இதனால், சிறுநீரில் இயல்புக்கும் அதிகமாக நுரை குமிழ்கள் தெரிந்தால், அதுவும் சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீர் குறைவாக கழித்தல்:
சிறுநீரக கற்கள் சிறுநீர்க்குழாயை அடைத்துக் கொள்வதால், குறைவாக சிறுநீர் கழிக்கலாம். ஒரே நேரத்தில் சிறுநீர் முழுவதுமாக வெளியேற முடியாததால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையும் ஏற்படலாம்.
சிறுநீரில் துர்நாற்றம்:
சிறுநீரக கற்கள் இருந்தால், சிறுநீரில் துர்நாற்றம் ஏற்படலாம். இருப்பினும், துர்நாற்றம் பிரச்சினை வேறு பல காரணங்களாலும் ஏற்படுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க கடைபிடிக்க வேண்டியவை:
- போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
- அவ்வப்போது ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து குடிக்கலாம்.
- உணவில் உப்பின் அளவைக் குறைக்கவும்.
- சரிவிகித உணவை உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
- உடல் எடையை கட்டுக்கூள் வைப்பதும் முக்கியமானது.