அரிசி தண்ணீர் கொண்டு முகத்தை பொலிவாக்குவது எப்படி என இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம். இயற்கையான முறையில் இதனை செய்வதன் மூலம் பக்கவிளைவுகளை தவிர்க்க முடியும்.
அரிசி தண்ணீர் கொண்டு நம்மால் க்ளென்ஸர், ஃபேஸ் மாஸ்க் மற்றும் டோனர் ஆகியவற்றை எளிமையாக உருவாக்க முடியும். முதலில் அரிசி தண்ணீர் தயாரிக்கும் முறையை காணலாம். இதற்காக எந்த விதமான அரிசி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
முதலில் அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கழுவிய அரிசியில் குடிக்க பயன்படுத்தும் நீரை சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதையடுத்து, அரிசியை வடிகட்டி விட்டு தண்ணீரை பிரித்து எடுக்கலாம். இந்த நீரை 3 அல்லது 4 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
இந்த அரிசி தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து அத்துடன் காய்ச்சாத பால் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் க்ளென்ஸர் தயாராகி விடும். இதில் காட்டன் கொண்டு நனைத்து முகத்தில் தேய்க்கலாம். 5 நிமிடங்கள் கழித்த பின்னர் இதனை கழுவி விடலாம்.
பின்னர், இதே அரிசி தண்ணீரை ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். இதனுடன் ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல், வைட்டமின் இ ஆயில் 2 துளிகள் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இந்த ஃபேஸ் மாஸ்கை 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
மேலும், இந்த அரிசி தண்ணீரை டோனராக பயன்படுத்தலாம். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து தேவைப்படும் நேரத்தில் உபயோகிக்கலாம். இப்படி செய்வதனால் இரசாயனம் கலக்காத பொருள்களை வீட்டிலேயே உருவாக்க முடியும். இவற்றை தொடர்ச்சியாக 7 நாட்கள் பயன்படுத்தினாலே முகம் பொலிவாக காட்சியளிக்கும்.