நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக கருதப்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என்று அனைத்திலுமே மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளது. இது நீரிழிவு முதல் மூலநோய் வரை பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. வருடத்தில் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும் பழங்களில் ஒன்று நாவல் பழம். இந்தப் பழத்தில் நம் உடலுக்கு நன்மை தரும் பல சத்துகள் உள்ளது. ஆகவே இந்தப் பழத்தை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ள மறக்காதீர்கள். இப்போது இந்தக் கட்டுரையில் நாவல் பழம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
செரிமான ஆரோக்கியம்:
நாவல் பழத்தில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. ஆகையால் நாவல் பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுவதோடு மலச்சிக்கல் வராமலும் தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மலம் எளிதாக வெளியேறவும் நாவல் பழம் உதவுகிறது. நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் நிறைந்துள்ளன. அத்துடன் இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல், வாயு, தசைப்பிடிப்பு மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்தது:
ஆந்தோசனினின், ஃப்ளாவோனாய்ட், பாலிபீனால் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் நாவல் பழங்களில் அதிகமாக உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தங்களை கட்டுப்படுத்தி, நாள்பட்ட நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. மேலும், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுதல், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தை குறைத்தல், ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் கண் பார்வையை மேம்படுத்துதல் போன்றவை நாவல் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் ஆகும்.
இதய ஆரோக்கியம்:
நாவல் பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் ஒழுங்குப்படுத்துகிறது. இதன் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும், நாவல் பழத்தில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் இது உதவுவதாக பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும், நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமாமல் செல்களின் மீள் உருவாக்கத்துக்கும் உதவி செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:
நாவல் பழத்தில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். இதன் மூலம் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடும் வலுவை உடல் பெறுகிறது. அத்துடன், நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.
சரும ஆரோக்கியம்:
நாவல் பழத்தில் அதிகமான ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளதால், ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பிற்கு எதிராக பாதுகாத்து சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. இது சருமத்திற்கு இளமையான தோற்றத்தையும் பளபளப்பையும் தருகிறது. நாவல் பழத்தில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் சருமத்தை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாத்து முகப்பரு புண் போன்ற பல்வேறு வகையான பாக்டீரியா தொற்றுகளை தடுக்கிறது.
உடல் எடை பராமரிப்பு:
நாவல் பழத்தில் குறைவான கலோரிகளும் அதிகமான நார்ச்சத்தும் உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தங்கள் டயட்டில் தாராளமாக இந்தப் பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இதை சாப்பிட்டதும் வயிறு நிறைந்த திருப்தி கிடைப்பதால் அதிமான கலோரிகள் உட்கொள்வதை தடுக்கிறது. மேலும், நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
வாய் சுகாதாரம்:
நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவியாக இருக்கிறது. நாவல் மரத்தின் இலைகளும் பட்டைகளும் வாய்களில் வரும் அல்சர் மற்றும் ஈறு நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஹீமோகுளோபினை மேம்படுத்துகிறது:
நாவல் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து காரணமாக நம்முடைய ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இதனால் ரத்தசோகை வருவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும் இது உதவுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்:
நாவல் பழத்தில் ஆந்தோசைனின் என்ற சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இது தீங்கு நிறைந்த ஃப்ரீ ரேடிகல்ஸை சமநிலைப்படுத்தி புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள ஆண்டோசியனின்கள், ஃபிளாவோனாய்டுகள், எலகாகித் அமிலம் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவை உறுப்புகளில் புற்றுநோயை தடுப்பதற்கான திறனைக் கொண்டிருக்கின்றன.