மத்தியப் பிரதேச மாநிலத்தில், வனம் மற்றும் சிறைத்துறைகளுக்கு ஆட்சேர்ப்புத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. போபாலைத் தலைமையிடமாகக் கொண்டு மத்தியப் பிரதேச பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்தத் தேர்வின் முடிவுகள், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தேர்வு முடிவில், ஒரு தேர்வர் 100-க்கு 101.66 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, முறையான விசாரணை நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டக் குழுவின் தலைவர் பிரஜாபத், “ஆள்சேர்ப்பு தேர்வில் பின்பற்றப்பட்ட இயல்பாக்குதல் செயல்முறையால் ஒரு நபர் மொத்த மதிப்பெண்களைவிட, அதிகமாக மதிப்பெண் பெற்றிருப்பது மாநிலத்தில் இதுவே முதல்முறை. இதையடுத்தே நியாயமற்ற இயல்பாக்குதல் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். வனக்காவலர் மற்றும் சிறைக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் எதுவும் செய்யாவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இயல்பாக்குதல் செயல்முறை என்பது மாணவர்கள் தாங்கள் எழுதும் தாள்களின் சிரமத்தால் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒரு செயல்முறையாகும். ஒரு மாணவரின் மதிப்பெண்ணை மற்றொருவரின் மதிப்பெண்ணுடன் ஒப்பிடும் வகையில் திருத்தியமைப்பது செயல்முறையை உள்ளடக்கியது. ஒரே பாடத்தில் ஒரு தேர்வு பல அமர்வுகளில் நடத்தப்படும்போது இது அவசியமாகிறது.