நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில் பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பக்கூடும் என்பதால் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கி, வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா உட்பட மொத்தம் 15 மசோதாக்கள் குறித்து விவாதிக்க அல்லது நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், 5 புதிய மசோதாக்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பக்கூடும் என்பதால் இந்த கூட்டத்தொடர் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டமும் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெபி நட்டா, எல்.முருகன், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் டிஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.