மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 20ஆவது முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என ஒரு வாரத்திற்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
இதையடுத்து மேலிடப் பார்வையாளர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலையில் நடந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டணித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருடன் சென்று அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க ஃபட்னவிஸ் உரிமை கோரினார்.
இதையடுத்து மும்பை ஆசான் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முதலமைச்சராக ஃபட்னவிஸ் மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் துணை முதலமைச்சராக மீண்டும் அஜித் பவாரும், முன்னாள் முதலமைச்சருமான ஏக்னாத் ஷிண்டேவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் நோயல் டாடா, பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், சல்மான் கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து மாநிலத்தின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவுக்கு முதலமைச்சர் ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சென்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கும் கோப்பில் ஃபட்னவிஸ் கையெழுத்திட்டார்.
புனேவில் வசிக்கும் சந்திரகாந்த் என்பவர், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த நிலையில், அவரது மனைவி மருத்துவச் செலவுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உதவி கேட்டிருந்தார். அதனை ஏற்று, முதல்வராகப் பதவியேற்ற பின் ஃபட்னவிஸ், அவருக்கு நிதியுதவி வழங்க உடனடியாக முடிவு செய்து, சத்தியப்பிரமாணம் செய்த உடனேயே சந்திரகாந்தின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
வழக்கமாகப் பதவியேற்ற பின் திட்டங்களின் கோப்புகளில் முதலமைச்சர்கள் கையெழுத்திடுவது உண்டு. அதுவும் தாங்கள் அறிவித்த திட்டங்களின் கோப்புகளில் கையெழுத்திடுவார்கள். ஆனால், ஃபட்னவிஸ் வழக்கத்துக்கு மாறாக சிகிச்சை உதவி கோரிய கோப்புக்கு கையெழுத்திட்டார். இது அவருக்குப் பாராட்டுகளை குவித்து வருகிறது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து அமைச்சர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார். மேலும் ஏக்நாத் ஷிண்டேவிடம் துணை முதல்வர் பொறுப்பை ஏற்கும்படி தான் கூறியதாகவும் அதை அவர் எவ்விதத் தயக்கமுமின்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் ஃபட்னவிஸ் கூறினார்.