கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்று இருந்தார். அப்போது அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் வயநாடு தொகுதியை தியாகம் செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 13 ஆம் தேதி வயநாடு மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அபார சாதனை படைத்தார். இதையடுத்து பிரியங்கா காந்தி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயநாடு தொகுதி எம்பியாக நாடாளுமன்றத்தில் பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரியங்கா காந்தி 2 நாட்கள் வயநாடு தொகுதியில் முகாமிட்டுள்ளார்.
தன்னை அபார வெற்றி பெற செய்த மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
மேலும் வயநாடு தொகுதி மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக கூறினார். இன்று 2 வது நாளாக பிரியங்கா காந்தி, வயநாடு தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.