இந்தியா கூட்டணிக்கு தலைவராக தயார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், அவருக்கு தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருவதை அடுத்து காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்தியா கூட்டணியில் இருந்து அந்த கட்சி வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணி என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்புக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையேற்று இருந்த நிலையில், இந்தியா கூட்டணி தேர்தலில் மண்ணை கவ்வியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு சரியில்லை என்று குற்றம் காட்டப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்தியா கூட்டணியை தலைமை ஏற்று வழிநடத்தத் தயாராக உள்ளேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்ததை அடுத்து, அவருக்கு இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து மம்தா பானர்ஜி, “இந்தியா கூட்டணி தலைவர்கள் என் மீது காட்டிய மரியாதைக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். இந்தியா கூட்டணியை நன்றாக வழிநடத்துவேன். அவர்களால் கூட்டணியை வழி நடத்த முடியாவிட்டால் என்ன செய்ய முடியும்? ஆனால், நான் எல்லோரையும் ஒன்றாக ஒருங்கிணைத்து ஒற்றுமையாக அழைத்துச் செல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே உள்ள ஒரு கட்சியின் தலைவர் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்பதா என்று காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்தியா கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.