பிப்ரவரி மாதம் நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.பலதரப்பட்ட மக்களுக்கும் இந்த பட்ஜெட் தொடர்பான பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பட்ஜெட் தாக்கலுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன. நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்திய அரசாங்கத்தின் முக்கிய துறைகளில் ஒன்றாக உள்ள ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகின்றது. இது தேசிய ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய மக்களின் பயணம், போக்குவரத்து ஆகியவற்றில் இன்றியமையாத அம்சமாக இருக்கும் ரயில்வே துறை அதன் உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய ரயில்கள், ரயில் நிலைய கட்டிடங்கள், ஓய்வறைகள் போன்றவற்றை மறுவடிவமைத்து, அதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.
இதன் விளைவாக, ரயில்வே துறைக்கு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த கணிசமான நிதி உதவி தேவைப்படுகின்றது. இல்லையெனில், அது நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். 2024-25 நிதியாண்டிற்கான நிகர வருவாயின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.2800 கோடியாக வைக்கப்பட்டுள்ளது. 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் நிகர வருவாய் மிகக் குறைவு.