சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் அதிகம் இளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பாதிக்கிறது. இந்த நோய்யை எப்படி கட்டுப்படுத்துவது மற்றும் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டது. தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி அனைவரும் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றனர். கோவிட் வைரஸிற்கான வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டு நோய் தொற்று கட்டுபடுப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிட் தொற்று ஆரம்பித்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று உருவாகி உள்ளது. மனித மெட்டாப் நியூமோ வைரஸ் (HMPV) என்ற இது வேகமாக பரவி வருகிறது.
தற்போது வரை வெளியான தகவலின்படி, இந்த புதிய HMPV வைரஸால் சீனாவில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த வைரஸால் சீனாவில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. கோவிட் தொற்று போலவே இந்த HMPV வைரஸ் முதலில் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. பிறகு சுவாச மண்டலத்தை பாதித்து, உடலை நோய்யுற செய்கிறது. குளிக்காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
HMPV வைரஸின் அறிகுறிகள் என்ன?
HMPV வைரஸின் ஆரம்பகால அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் சளி ஆகும். மேலும் தொடர்ந்து இருமல், தும்மல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் இருந்து கொண்டே இருக்கும். கோவிட் போலவே ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது. HMPV வைரஸால் இளம் குழந்தைகள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஒரு சிலருக்கு உடனே கடுமையான நோய் பாதிப்பு ஏற்படலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும்.
எப்படி தடுப்பது?
HMPV வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த நம்ம சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கையை சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கழுவ வேண்டும். இருமல் அல்லது தும்மல் இருந்தால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். தொடர் இருமல் இருந்தால் பொதுவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை மாஸ்க் பயன்படுத்துவது நல்லது. இதனால் நோய் நம்மை தாக்காமல் பாதுகாத்து கொள்ள முடியும். மற்றவர்களுடன் கை குலுக்குவதையோ அல்லது வேறு ஏதேனும் விதத்தில் தொடர்பு கொள்வதையோ தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இந்த தொற்று தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். தற்போது வரை இந்த நோய்க்கான தடுப்பூசி கண்டுபுடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது