இந்தியாவில் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 3 பச்சிளங் குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்ற HMPV வைரஸ் நுரையீரலை பாதிக்கிறது. மூச்சுவிடுவதில் சிரமம் இந்த வைரஸ் ஏற்படுத்தும் முக்கிய பிரச்சனையாகும். குழந்தைகளையும், வயதானவர்களையும் இந்த வைரஸ் அதிகம் பாதிக்கிறது.
சீனாவில் HMPV வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எந்த வெளிநாடுகளுக்கும் பயணிக்காத அந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டது எப்படி என ஆய்வுகள் நடக்கின்றன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ICMR மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
2 குழந்தைக்களுக்கும் கண்டறியப்பட்ட HMPV வைரஸும், சீனாவில் கண்டறியப்பட்ட திரிபும் ஒரே வகையா என்பது குறித்து தெளிவான விளக்கம் வெளியாகவில்லை. இதனிடையே குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு வந்தது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அவசர கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3 ஆவது குழந்தை HMP வைரசால் பாதிக்கப்பட்டது. கடந்த 24 ஆம் தேதி பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.