இந்தியாவில் பல்வேறு விதமான கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான மதச் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வேஷ்டிகள் அணிந்து மேல் சட்டை இல்லாமல் செல்ல வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதன்படியே, பக்தர்கள் இன்றும் கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேல் சட்டை இல்லாமல் கோயிலுக்குள் நுழையும் முறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா நகராட்சியில் உள்ள சிவகிரி ஸ்ரீநாராயண குரு மடம் சார்பில், சமீபத்தில் யாத்திரை மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அம்மடத்தின் தலைவரான சுவாமி சச்சிதானந்தா, ”கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள், மேல்சட்டை அணியக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. அந்த முறையைக் கைவிட வேண்டும். ஆண்கள் (பிராமணர்கள்), பூணூல் அணிவதை உறுதி செய்வதற்காக ஆடைகளை அகற்றும் நடைமுறை கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை ஸ்ரீநாராயண குருவின் பிரசங்கங்களுக்கு எதிரானது. தற்போதுகூட, சில கோயில்கள் இதைப் பின்பற்றுவது வருத்தமாக இருக்கிறது.
சில கோயில்களில், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில ஸ்ரீநாராயணர் கோயில்களும் இதைப் பின்பற்றுவதைக் காணும்போது, நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதுமட்டுமின்றி, பல ஸ்ரீ நாராயணிய கோயில்களில் கூட மேல் ஆடையை அகற்றும் வழக்கத்தை கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளன. இது எப்படியும் சரி செய்யப்பட வேண்டும். ஏனென்றால், கோயில் கலாசாரத்தை நவீனப்படுத்தியவரே ஸ்ரீ நாராயண குருதான்” என வலியுறுத்தினார்.
இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன் அதை ஆமோதித்துப் பேசினார். மேலும், “இது சமூகச் சீர்திருத்தத்திற்கான குறிப்பிடத்தக்க தலையீடாக கருதப்படலாம். எனினும், எந்த மாற்றங்களும் தன்னார்வமாக இருக்க வேண்டும், கட்டாயமாக இருக்கக்கூடாது” எனப் பரிந்துரைத்தார்.