லக்கி பாஸ்கர் திரைப்படத்தைப் பார்த்து விட்டு மாணவர்கள் சிலர் எடுத்த வீபரீத முடிவால், போலீசார் தற்போதுவரை அவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது.
தனியார் வங்கியில் காசாளராக பணிபுரிந்து வரும் படத்தின் நாயகனான பாஸ்கர், மிகவும் நேர்மையுடன் தனது கடமையை செய்து வருகிறார். இருப்பினும் இதற்கான பயன் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் குறுக்குவழியில் பணத்தை முதலீடு செய்து சம்பாதித்து நல்லதொரு நிலையை அடைகிறார்.
சரியான நேரத்தில் இந்த ஊழலிலிருந்து விலகிக்கொள்ளும் நாயகன் மீண்டும் தனது சாமர்த்தியத்தால் அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கிறார். தான் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை வைத்து வெளிநாட்டில் புதிய தொழில் தொடங்கி இன்னும் பெரிய செல்வந்தராகிறார் என்பதுடன் படம் நிறைவடைகிறது.
இந்தப் படத்தை பார்த்துதான் பள்ளி மாணவர்கள் சிலர் விடுதியிலிருந்து தப்பி ஓடி விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள். சம்பவத்தின்படி விசாகப்பட்டினத்தில் உள்ள மகாரணிப்பேட்டையில் தனியார் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவர்களான சரண் தேஜா, ரகு, கார்த்திக், கிரண் குமார் படத்தின் கதாநாயகனை போல பணம், கார் போன்றவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையோடு, விடுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பணம் சம்பாதித்துவிட்டுதான் வருவோம் என்று தங்களின் நண்பர்கள் சிலரிடத்தில் தெரிவித்து செல்ல, விடுதியில் காப்பாளரிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்தநிலையில், வழக்குப்பதிவு செய்து சிசிடிவியின் அடிப்படையில் மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் குறித்த எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.