கர்நாடகா, பெங்களூருவில் 8 மாதக் குழந்தை மற்றும் 3 மாத பெண் குழந்தை என 2 குழந்தைகள் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் இரண்டு மாதக் குழந்தை HMPV வைரஸ் பாசிடிவ் என வந்துள்ளது.
The Human Metapneumovirus எனப்படும் HMPV வைரஸ் மீண்டும் சீனாவில் மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வருகிறது. நுரையீரலை பாதிக்கும் இந்த வைரஸ் கொரோனாவை போன்றே அறிகுறிகளை உண்டாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
HMPV வைரஸ் இந்தியாவை பாதிக்காது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று மட்டும் 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்துள்ளது. கர்நாடகா, பெங்களூருவில் 8 மாதக் குழந்தை மற்றும் 3 மாத பெண் குழந்தை என 2 குழந்தைகள் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் இரண்டு மாதக் குழந்தை HMPV வைரஸ் பாசிடிவ் என வந்துள்ளது.
மீண்டும் மாஸ்க்:
இந்நிலையில், கர்நாடகாவில் HMPV வைரஸ் பரவலை தடுக்க கர்நாடக அரசு பொதுமக்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுவெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளது. முடிந்தவரை பொது இடங்களை தவிர்ப்பது நல்லது என்றும் கூறியுள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கர்நாடகா அரசு, பள்ளிகளுக்கு சில மருத்துவ அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை விடுத்துள்ளது.
அதை பெற்றோர்களுக்கும் அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் குழந்தைகளுக்கு குறைந்த சளி, இருமல், மிதமான தொண்டை வலி இருந்தாலும் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளது. கர்நாடகாவில், HMPV பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் அமைத்து மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மகாராஷ்டிரா அரசும் மக்களை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக அரசின் சுற்றறிக்கையில்..
1.மூக்கை சிந்தவோ அல்லது தும்மல் வரும்போதோ கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்.
2.சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.
3.அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
4.சளி , காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருப்பின் பொது இடங்களை தவிர்ப்பது நல்லது.
5.அடிக்கடி தண்ணீர் குடித்து உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளது.
புதிய வைரஸ் அல்ல:
இந்த வைரஸ் ஏற்கெனவே 2001 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது புதிய வைரஸ் அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கூறியுள்ளது. அதுமட்டுமன்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் 6 மாதக் குழந்தைக்கு HMPV பாதிப்பு கண்டறியப்பட்டதையும் குறிப்பிட்டு காட்டியுள்ளது. அந்த வைரஸ்தான் தற்போது மீண்டும் இந்த பருவநிலையில் பரவி வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கூறுகையில் “HMPV வைரஸ் உலகம் முழுவதுமே பரவி வரும் வைரஸ். அது 2001 ஆண்டே கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 3 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம். காற்றின் மூலம் பரவும் இந்த வைரஸ் சுவாசக்குழாயில் சென்று பாதிப்பை உண்டாக்கும். அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் பாதிக்கும். குறிப்பாக குளிர்காலத்திலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் இதன் பரவல் அதிகமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி இது சீனாவிலிருந்துதான் வந்ததா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் யாரும் வெளிநாட்டு பயணம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
அறிகுறிகள் எப்படி இருக்கும்? :
HMPV வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மிதமான சளி ஆரம்பநிலையில் தோன்றுகிறது. பின் இருமல், காய்ச்சல், சளி தீவிரமாகிறது. அடுத்ததாக சுவாசக்குழாயை பாதித்து மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது. இந்த வைரஸ் மூச்சுக்குழாய்களை குறி வைப்பதால் குளிர்காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் குளிர்காலத்திதான் மூச்சுக்குழாய் தொற்றுகள் அதிகமாக இருக்கும். எனவே முடிந்தவரை குளிர்காலத்தில் முகக்கவசம் அணிவது நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுகாதாரத்துறை HMPV குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கூறினாலும் மக்களுக்கு மீண்டும் ஒரு வைரஸா என்று பயம் தொற்றிக்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி குழந்தைகளை அதிகமாக பாதிப்பதால் பெற்றோர்கள் அதிக கவலையில் இருக்கின்றனர்.
அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களை தவிர்ப்பது நல்லது, குழந்தைகள் , வயதானவர்களை பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்துவது என அரசு மக்களின் விழிப்புணர்வுக்காக வெளியிடும் அறிக்கைகளை பார்க்கும் போதும் மீண்டும் கொரோனா நாட்களை நினைவு கூறுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.