நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக எம்.பி.க்கள் போட்டி போராட்டம் நடத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 எம்.பி.க்கள் காயமடைந்தார்கள். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி செல்ல திட்டமிட்டனர். ஆனால், அதற்கு முன்னதாகவே, அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாகக் கூறி, நாடாளுமன்ற நுழைவு வாயில் முன் பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் இந்தியா கூட்டணியினர், நீல நிற ஆடையில் அம்பேத்கரின் படத்தை ஏந்தியபடி, அம்பேத்கர் சிலையில் இருந்து நாடாளுமன்ற நுழைவு வாயில் வரை பேரணி சென்றனர்.
அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் நான்காவது நுழைவாயிலான மகர துவார் அருகே இரண்டு தரப்பினரும் சந்தித்துக் கொண்ட போது, பரஸ்பரம் கண்டன முழக்கங்கள் வலுவாக எதிரொலித்தன. ஒரு கட்டத்தில் முழக்கங்கள் வாதங்களாக மாறி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளி விட்டதாகவும், அவர் வந்து தன் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும் பிரதாப் சந்திர சாரங்கி குற்றம்சாட்டினார். மேலும் அவைக்குச் சென்ற தன்னைத் தடுத்து மிரட்டியதாக பாஜகவினர் மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய பாஜக எம்.பி.-க்கள் அனுமதி மறுத்ததாகக் கூறி, வளாக சுவர் மீது ஏறி இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், பாஜக எம்.பி.க்கள், ஹேமங் ஜோஷி, அனுராக் தாக்கூர் மற்றும் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் டெல்லி காவல்நிலையத்தில் ராகுல் காந்தி மீது புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுடன் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர்.