சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 படம் வெளியானது. அப்போது, அப்படத்தின் ப்ரீமியர் ஷோவில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால், ஒரு பெண் உயிரிழந்தார். இதையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டது.
அல்லு அர்ஜுன் கைது:
புஷ்பா 2 தி ரூல் பட நாயகன் அல்லு அர்ஜுன், இன்று ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இதில், முதல் ப்ரீமியர் ஷோவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு காரணம் அல்லு அர்ஜுன்தான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுனின் கைது தற்போது தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் என்ன?
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இதன் முதல் காட்சியான ப்ரீமியர் ஷோ, ஐதராபாத்தில் இருக்கும் சந்தியா திரையரங்களில் ரசிகர்களுக்காக நடைப்பெற்றது. இந்த ஷோவில் படத்தை பார்க்க ஏற்கனவே பல ஆயிரம் பேர் தியேட்டருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இந்நிகழ்விற்கு அல்லு அர்ஜுனும் வருகை புரிந்தார். இதனால், ஏற்கனவே கட்டுக்கடங்காமல் இருந்த கூட்டம், காவலர்களை தாண்டி தியேட்டருக்குள் நுழைய ஆரம்பித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, படம் பார்ப்பதற்காக வந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் வந்திருந்த இவரது இரண்டு மகன்களும் பலத்த அடி காரணமாக, மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!
சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் தியேட்டர் நிர்வாகம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், முன்னறிவிப்பின்றி நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால், இப்பேற்பட்ட நிகழ்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. திரையரங்கு நிர்வாகமும் இதற்கு பொறுப்பு என்ற வகையில் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்து முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த டிச.,8ஆம் தேதியன்று சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில், சந்தியா தியேட்டரின் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதே போல தலைமை பாதுகாப்பு காவலரும் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
25 லட்சம் கொடுத்த அல்லு அர்ஜுன்!
சந்தியா திரையரங்கின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார். இது குறித்து ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நிகழ்வு தனக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாகவும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்க்கொள்வதாகவும் கூறினார்.