டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த காலத்தில் அம்பேத்கர் என கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இன்று காலை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் முன்பு கூடிய எதிர்க்கட்சியினர், தங்களது கைகளில் அம்பேத்கரின் படங்களை ஏந்தி ‘ஜெய் பீம்’ என்று முழக்கமிட்டதுடன், அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சூழலில், அம்பேத்கரை முழுமையாக மதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்..