கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினை நிலவி வருவதாக ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். இதற்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டிய அவசியத்தை மாநிலங்களவையில் பேசும் போது வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு நகரில் சுமார் 1.4 கோடி பேர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு 16 டி.எம்.சி காவிரி தண்ணீர் கிடைத்து வருகிறது. ஆனால் இது போதுமானதாக இல்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தனியார் டேங்கர் லாரிகள் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதாக கூறுகின்றனர். ஒரு டேங்கர் தண்ணீர் 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு தண்ணீருக்கு மட்டுமே மாதம் 20 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
குடிநீருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.பியும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா, இந்தியாவின் ஐடி தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் மக்கள் தண்ணீருக்காக திண்டாடும் நிலை காணப்படுகிறது. தனியார் டேங்கர் லாரிகள் அதிக கட்டணம் வசூலித்து மாஃபியா போன்று செயல்பட்டு வருகிறது.
பெங்களூரு தண்ணீர் பிரச்சினை:
எனவே மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி பெங்களூரு மக்களிடம் விசாரிக்கையில், தாங்கள் படும் சிரமங்களை பகிர்ந்து கொண்டனர். அதாவது, மூன்று நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் தண்ணீர் கிடைக்கிறது. 6,000 லிட்டர் கொண்ட ஒரு லோடு 1,000 ரூபாய். எனவே 5 பேர் கொண்ட ஒரு வீட்டிற்கு தண்ணீருக்கு மட்டும் 10,000 ரூபாய் செலவாகிறது. அதுவும் சுத்தமாக இருப்பதில்லை என்கின்றனர்.
மாதச் செலவு:
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் கூறுகையில், தண்ணீருக்கு மட்டும் மாதம் 20,000 முதல் 25,000 ரூபாய் வரை செலவிடுகிறோம். அதிலும் கோடைக்காலம் வந்துவிட்டால் நிலைமை மோசம். கட்டணம் தாறுமாறாக எகிறி விடுகிறது. ஒரு லோடிற்கு 100 முதல் 150 ரூபாய் வரை அதிகரித்து விற்கின்றனர்.