மகாராஷ்டிராவில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசியதை தொடர்ந்து துணை முதல்வராக பதவியேற்க ஏக்நாத் ஷிண்டே ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றும் முதலமைச்சர் குறித்த சஸ்பென்ஸ் அங்கு நீடித்து வருகிறது.
முதலமைச்சராகும் தேவேந்திர பட்னாவிஸ்?
இந்நிலையில், மகாராஷ்டிர பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோரை மேற்பார்வையாளர்களாக பாஜக தலைமை நியமித்துள்ளது. இக்கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதலமைச்சர் மற்றும் சில முக்கிய துறைகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை தேவேந்திர பட்நாவிஸ் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, துணை முதலமைச்சராக பதவியேற்க ஏக்நாத் ஷிண்டே ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, நாளை ஆசாத் மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, வி.வி.ஐ.பி.க்கள் உள்ளிட்ட சுமார் 40,000 பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.