2000 ஆம் ஆண்டு பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின் மலையாளத்தில் சில படங்களில் நடித்த வருக்கு, 2015 ஆண்டு எல்.விஜய்யின் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் கிடைத்தது. இதனையடுத்து, ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவ்வப்போது இவர் திருமணம் குறித்தான பல்வேறு வதந்திகள் பரவியது உண்டு. இருப்பினும் அது எதையும் கீர்த்தி சுரேஷ் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் மாதம் கல்யாணம் நடக்க உள்ளதாகவும், அதுவும் கீர்த்தி, தன் 15 வருட கால நீண்டகால நண்பரை திருமணம் செய்யப்போவதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகின.
அந்த நண்பரின் பெயர், ஆண்டனி தாட்டில். துபாயை தலைமையிடமாக கொண்டு, தொழிலதிபராக இருக்கும் ஆண்டனி, சொந்த ஊரான கொச்சியில் தங்கும் விடுதிகளையும் நடத்தி வருவதாக தகவல். கீர்த்தியும் இவரும் பள்ளிகால தோழர்களென சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் காதலர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ‛‛15 ஆண்டுகால உறவு, இனியும் தொடரும்… ஆண்டனி – கீர்த்தி” என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் உள்ள பெருமாளை தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷ்,
“நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. அடுத்த மாதம் எனக்கு திருமணம். திருமணம் கோவாவில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.