தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் ஒரே இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தான். 90களில் ஹிட் கொடுத்த பல கமர்ஷியல் படங்களில் பெரும்பாலான படங்கள் யாருடையது என்று பார்த்தால் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் படங்களாகத்தான் இருக்கும். 1990ல் ‘புரியாத புதிர்’ படத்தில் தொடங்கி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், சரத்குமார் என பல ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் கே.எஸ். ரவிக்குமார்.
நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம் என இவர் இயக்கத்தில் வெளிவந்த எக்கச்சக்க படங்கள், வெற்றி படங்களே.
கே.எஸ். ரவிக்குமார் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார்.
இதற்கிடையே, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார். நேற்று மாலை அவரின் உயிர் பிரிந்தது. இந்த தகவலை ரவிக்குமார் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ருக்மணி அம்மாளுக்கு வயது 88. வயது மூப்பின் காரணமாக ருக்மணி அம்மாள் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.