நயன்தாராவின் திருமண ஆவணப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இந்த படத்தின் டிரைலரில், நானும் ரௌடி தான் படத்தின் 3 வினாடிகள் BTS வீடியோ பதிவு இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து, அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ், அந்த காட்சியை உடனடியாக நீக்கவில்லை என்றால், 10 கோடி அபராதம் கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் விடுத்தார். இது குறித்து நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இசை வெளியீட்டு விழாக்களில் பஞ்ச் வசனம் பேசுவதில், பாதி கூட நீங்கள் உண்மையான மனிதராக இல்லை என தனுஷை சாடிய நயன், அவரை “பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் நபர்” என்றும் குறிப்பிட்டிருந்தார். நயன்தாராவின் இந்த பதிவிற்கு தனுஷ் எதுவுமே பதில் கூறவில்லை. இவர்களின் ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாற ஆரம்பித்தனர். சமீபத்தில் ஒரு திரை பிரபலத்தின் திருமணத்தில் தனுஷும் நயனும் சந்தித்துக்கொள்ளும் நிலை வந்தது. ஆனால், இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமல் திரும்பிக்கொண்டனர்.
தனுஷுடன் மரியான் படத்தில் சேர்ந்து நடித்திருந்த பார்வதி, நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, பார்வதி அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார்.
“நயன், இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அவர் அப்படி ஒரு விஷயத்தை கூறுகிறார் என்றால் அதில் நிச்சயம் உண்மை இருக்கும் என உணர்ந்தேன். எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்ட போது ஆதரவு தெரிவிக்க யாரும் இல்லை. அந்த நிலை நயனுக்கும் வரக்கூடாது என்பதற்காக அவருக்கு ஆதரவு தெரிவித்தேன்” என பார்வதி தெரிவித்திருந்தார்.
பார்வதி மட்டுமல்ல, தனுஷுன் சேர்ந்து நடித்திருந்த ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, நஸ்ரியா உள்ளிட்டோரும் நயனின் பதிவிற்கு லைக்ஸ் போட்டிருந்தனர்.