அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் யூடியூபில் நம்பர் 1 டிரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அஜர்பைஜான் உள்ளிட்ட பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் நேற்று இரவு 11.08 மணிக்கு வெளியானது.
டீசரில் ‘எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீசர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இப்படத்தின் டீசர் யூடியூபில் 40 லட்சம் பார்வைகளை பெற்று நம்.1 டிரெண்டிங்களில் உள்ளது. விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.