அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ல் வெளியான புஷ்பா திரைப்படம் நாடெங்கும் மகத்தான வெற்றி பெற்ற நிலையில் 2 ஆம் பாகமும் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தை பற்றி வெளியாகும் விமர்சனங்களும் நல்லபடியாக உள்ளன. இதனால் படத்தின் வசூல் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால், புஷ்பா 2 திரைப்படம் வெளியாகும் முன்பே, முன்பதிவிலும் சரி, சாட்டிலைட் உட்பட பிற உரிமைகள் விற்பனையிலும் சரி புதிய சாதனையை படைத்திருந்தது. முன்பதிவில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூலை தொட்டதாக சொல்லப்பட்டது.
அதேபோல், திரையரங்க உரிமை மட்டும் ரூ. 660 கோடிக்கும், டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 250 கோடிக்கும் விலை போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வெளியாகி, முதல் நாளான நேற்று நாடு முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் செய்த வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அனைத்து மொழிகளிலும் 172 கோடியே 10 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் 156 கோடி வசூலித்ததே முதல்நாளில் அதிக வசூல் சாதனையாக இருந்தது. இப்புதிய சாதனை மூலம் புஷ்பா 2, இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக உருவெடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி என இருமொழிகளில் சேர்த்து முதல் நாளில் 50 கோடி ரூபாயை வசூலித்த படமாகவும் புஷ்பா 2 சாதனை புரிந்துள்ளது. இதன் மூலம் வசூல் சூப்பர் ஸ்டார் என சென்னைப் பையன் அல்லு அர்ஜுன் மீண்டும் நிரூபித்துள்ளார்.