விடுதலை 2 நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ராம்சரண் படத்தில் தான் இல்லையென்றும் அதற்கான காரணம் என்ன என்றும் கூறியுள்ளார்.
‘விடுதலை 2’ இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். முதலாம் பாகத்தின் நீட்சியான இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகம் போலவே இப்படத்திற்கும் இளையராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார். ‘விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக இப்படத்தின், ‘தினம் தினமும்’ பாடல் இணையத்தைக் கலக்கி வருகிறது. இளையராஜா குரலில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தணிக்கை குழு இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து படக்குழு படத்தின் புரோமோ வீடியோக்களை தினமும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக, படக்குழு இன்று ஆந்திரா சென்றுள்ளது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம் ‘நீங்கள் ராம்சரணின் 16 வது படத்தில் இருக்கின்றீர்களா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அப்படத்தில் நான் இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, எனக்கு நேரம் இல்லை. இன்னொன்று, சில நேரம் கதை நன்றாக இருந்தாலும், என் கதாபாத்திரத்தின் வேலையென்பது அங்கு எனக்கு போதுமானதாக இருப்பதில்லை என எனக்கு தோன்றும். அப்படியே இதிலும் நடந்தது” என்று கூறியுள்ளார்.
ராம்சரணின் 16-வது படத்தை, தெலுங்கு இயக்குநர் BuchiBabu Sana இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் உபென்னா திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். ஆகவே தன்னுடைய இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியோடு இணைந்து பணியாற்றுவார் BuchiBabu Sana என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அத்தகவல்களை மறுத்துள்ளார்.