சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் 12 ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த படம், மத கஜ ராஜா. இந்த படம் தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி, விரைவில் வெளியாக இருக்கிறது.
மத கஜ ராஜா:
கோலிவுட்டில் எடுக்கப்பட்டிருக்கும் எத்தனையோ திரைப்படங்கள், இதுவரை வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அப்படி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்துவந்த படம், மத கஜ ராஜா. 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படங்களின் பணி, 2013ஆம் ஆண்டு முடிவடைந்தது. அப்போதே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிதி பிரச்சனை காரணமாக படம் ரிலீஸாகாமல் தள்ளிப்போடப்பட்டது. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க அவருடன் சந்தானமும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் கதாநாயகிகளாக வருகின்றனர். இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு வருடமும், இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இதற்கு சரியான தீர்வு கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் இதனை அனைவரும் வெறுத்துபோய் கேட்காமலேயே விட்டுவிட்டனர். இந்த நிலையில், திடீரென பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 12ஆம் தேதி, மத கஜ ராஜா படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இது, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு:
மத கஜ ராஜா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் சுந்தர்.சி, குஷ்பு, படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை, டிடி தாெகுத்து வழங்கினார். இதில், வேட்டி சட்டை அணிந்து வந்து கலந்து கொண்ட விஷால், கை நடுக்கத்துடனும் குரலில் தடுமாற்றத்துடனும் பேசினார்.
மைக் பிடிக்கும் போது அவரது கை நடுங்கியது, பேசும் போது குரல் தடுமாறியது. இதனால், பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இதற்கு தொகுப்பாளினி டிடி விளக்கம் கொடுத்தார். விஷாலுக்கு ஹய் ஃபீவர் இருப்பதாகவும் அந்த காய்ச்சலை பொருட்படுத்தாமல் அவர் படத்தின் விழாவிற்கு வந்திருப்பதாகவும் கூறினார். விஷால் பல நிகழ்ச்சிகளில் தெம்பாக வந்து சாமி கும்பிட்டு சாப்பிட்ட வீடியோக்களை ட்ரோல் செய்த பலர், இவரது இந்த நிலையை பார்த்து பரிதாபப்பட்டு வருகின்றனர். மேலும், அப்படி கலாய்த்ததற்கு மன்னிப்பும் கேட்டு வருகின்றனர்.
சுந்தர்.சி பேச்சு:
இதுவரை, பேய் படங்களையே எடுத்தாலும் அதில் காமெடியை புகுத்து ஹிட் கொடுத்து வரும் இயக்குநராக இருக்கிறார் சுந்தர்.சி. இதற்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத கஜ ராஜா படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், “இப்பாே பார்த்தாலும் அந்த படம் அவ்ளோ ஜாலியா இருக்கும்” என கூறினார். இவர் கூறியது பாேல, இப்படம் தற்போது வெளியாக இருக்கும் நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் இது குறித்து அவர் பேசினார். அப்போது, படம் இவ்வளவு நாட்கள் கழித்து வெளியாவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் உள்ளதாக கூறினார். ரசிகர்கள் இந்த படம் குறித்து பாசிடிவாக சமூக வலைதளங்களில் பேசி வருவது தங்களுக்கு உந்துதலை கொடுப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர்.