நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மா, நடிகர் ராஜ்பால் யாதவ், நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகரான சுகந்தா மிஸ்ரா மற்றும் நடன இயக்குநரான ரெமொ டிசோசா போன்றோருக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “உங்களது சமீபத்திய நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஒரு முக்கியமான விஷயத்தினை உங்களது கவனத்திற்கு கொண்டு வருவது அவசியம் என நினைக்கிறோம். இது விளம்பரத்திற்கான ஸ்டண்ட்டோ அல்லது உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கோ அல்ல.
இந்த மின்னஞ்சலை மிகுந்த ரகசியத்துடன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத்தவறினால் உங்களது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும். அடுத்த 8 மணி நேரத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றால் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் பிஷ்னு என குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து திரைப்பிரபலங்கள் காவல் நிலையங்களில் புகாரளித்தனர். அதன்கீழ் அம்போலி மற்றும் ஓஷிவாரா காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ்பால் யாதவின் மனைவி அளித்த புகாரின் பேரில் மும்பை போலீசார் பிஎன்எஸ் 351(3)ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏனெனில், மின்னஞ்சலின் ஐபி முகவரி பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் சைஃப் அலிகான், தனது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரபலங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.