”முதல்வர் பதவியை வேண்டாம் என்றேன்” என நடிகர் சோனு சூட் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சோனு சூட், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவைத் தாண்டி, தேவைப்படுவோருக்குத் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற உதவிகள் செய்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். தாய்லாந்து சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ விளம்பர தூதராகவும் கவுரவ ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ”எனக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. நான் மறுத்தபோது, என்னை துணை முதல்வர் ஆகச் சொன்னார்கள்” என ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பேக்கு அளித்த பேட்டியின்போது சோனு சூட் தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்த பேட்டியில், “மக்கள் இரண்டு காரணங்களுக்காக அரசியலில் சேருகிறார்கள். ஒன்று, பணம் சம்பாதிப்பதற்காக. மற்றொன்று, அதிகாரத்தைப் பெறுவதற்காக. எனக்கு இவை இரண்டிலும் ஆர்வம் இல்லை. மக்களுக்கு உதவுவது என்பதை, நான் ஏற்கெனவே செய்து வருகிறேன். அந்த உரிமையை நான் யாரிடமும் கேட்க வேண்டியதில்லை.
ஒருவர், பிரபலமடையத் தொடங்கும்போது அவர்கள் வாழ்க்கையில் உயரத் தொடங்குவார்கள். ஆனால், அதிக உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது. நாங்கள் உயர விரும்புகிறோம். ஆனால், நீங்கள் எத்தனை காலம் உங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அரசியலில் சேர்ந்தால் டெல்லியில் வீடு, குறிப்பிடத்தக்க பதவி, உயர் பாதுகாப்பு, அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர்ஹெட் போன்ற ஆடம்பரங்கள் கிடைக்கும் எனப் பலரும் என்னிடம் கூறினார்கள். எனக்கு முதல்வர் பதவி தருகிறேன் என்று சொன்னார்கள். நான் மறுத்தபோது, என்னை துணை முதல்வர் ஆகச் சொன்னார்கள். அவர்கள் நாட்டில் மிகப் பெரியவர்கள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அரசியலில் எதற்கும் போராட வேண்டிய அவசியம் இல்லை.
இதுபோன்ற சக்திவாய்ந்த நபர்கள், நம்மைச் சந்தித்து உலகில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மை ஊக்குவிக்க விரும்புவது ஒரு உற்சாகமான கட்டம். ஆனால், என்னுடைய சுதந்திரத்தை இழக்க விரும்பாததால், நான் அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்பினேன். அதேநேரத்தில், நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. அரசியலில் நேர்மையாய் உழைக்கும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.