தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் தமது காந்தக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பி.ஜெயச்சந்திரன். அவர், புற்றுநோய்க்காக கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்ததாக கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1980 மற்றும் 90களில் இவரது குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம்.
குறிப்பாக, இசைஞானி இளையராஜா இசையில் பாடத்தொடங்கிய பிறகு ஜெயச்சந்திரன் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் அறிமுகமானார். அவரது இசையில் ஜெயச்சந்திரன் பாடிய, ‘ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’, ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’, ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’, ‘தாலாட்டுதே வானம்…’ ’கொடியிலே மல்லிகை பூ’ உள்பட அனைத்துமே அட்டகாசமான பாடல்கள்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ’கிழக்குச் சீமையிலே’ படத்தில் ’கத்தாழம் காட்டுவழி’ பாடலை பாடியிருந்தார். இவர் தமிழ் மற்றும் கேரள திரையுலகில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது மறைவு ரசிகர்களைக் கண்ணீரில் நனைத்துள்ளது.