இந்திய டெஸ்ட் அணியின் லெஜண்ட் ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து 855 விக்கெட்களை வீழ்த்தி, அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், இந்த இருவருக்கும் 11 அணியில் இடம் கிடைக்கவில்லை. மாற்றாக, வாஷிங்டன் சுந்தர் விளையாடினார்.
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைப்பதில்லை. கடைசியாக, 2022ஆம் ஆண்டு, ஜனவரியில்தான், வெளிநாட்டு டெஸ்டில் விளையடினார். இவரது கடைசி டெஸ்ட் பெஸ்ட், 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில்தான் கிடைத்தது. அப்போது, ஒரு இன்னிங்ஸில் 4/55 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில், அஸ்வினைவிட ஜடேஜாவுக்குதான் முக்கியத்தும் அளிக்கப்பட்டு வந்தது. காரணம், அஸ்வினைவிட ஜடேஜாவால் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட முடியும் என்பதால்தான். இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாற்றாக, வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்தது.
காரணம் என்ன?
சமீபத்தில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில், ரவிச்சந்திரன் அஸ்வின், 9 விக்கெட்களைதான் எடுத்திருந்தார். ஜடேஜாவால், அஸ்வின் அளவுக்கு கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு, 16 விக்கெட்களை சாய்த்தார்.
இதனைத் தொடர்ந்து, வேகத்திற்கு சாதகமான, பெர்த் டெஸ்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்த ஓவர்களை வீச மட்டுமே வாய்ப்பு கிடைத்த நிலையில், அதிலும் 2 முக்கிய விக்கெட்களை சாய்த்து அசத்தினார். மேலும், பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முன் நடைபெற்ற பயிற்சி டெஸ்டிலும் வாஷிங்டன் சுந்தர், அரை சதம் அடித்து அசத்தினார். இதனால், அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே ஸ்பின்னராக விளையாடுவார் எனக் கருதப்படுகிறது.
அஸ்வினுக்கு 38 வயதாகிறது. ஜடேஜாவுக்கு 36 வயதாகிறது. இந்திய டெஸ்ட் அணி, அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதால், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால், இனி வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் போன்ற ஸ்பின்னர்களுக்குதான் ரெகுலராக வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய, இந்திய டெஸ்ட் அணிக்காக 75 போட்டிகளில் ஆடியவரும், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான தேவங் காந்தி, அதில், ‘‘ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் கடந்த 10 வருடங்களாக, வெளிநாட்டு மண்ணில், ஒருமுறை மட்டுமே ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்திருக்கிறார்கள். மேலும், பேட்டிங்கை பொறுத்தவரை, இந்த இருவரையும் காட்டிலும் வாஷிங்டன் சுந்தர்தான் முன்னிலை வகிக்கிறார். மேலும், தற்போதைக்கு பார்மில் இருக்கும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்றால், அதிலும் அஸ்வின், ஜடேஜாவை விட, வாஷிங்டன் சுந்தர்தான் முதன்மை வகிக்கிறார். இதனால், வாஷிங்டன் சுந்தர்தான், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார்’’ எனக் கூறினார்.