
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவர் வென்றுள்ள பரிசுத் தொகை குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கான தொகையை விடவும், குகேஷுக்கான பரிசுத் தொகை குறைவு ஆகும்.
உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு டிங் லிரென் கடுமையான போட்டி நிலவி வந்தது. 13வது சுற்று வரை இருவரும் சமபுள்ளிகள் இருந்ததால் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த 14வது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58வது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தினார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாமபியன்ஷிப் பட்டம் வெல்லும் இரண்டவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
18 வயதாகும் குகேஷ் தான் உலகின் இளம் செஸ் சாம்பியன் ஆவார். முன்னதாக ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் கேரி கேஸ்பரோ 22 ஆவது வயதில் இந்த பட்டத்தை பெற்றார். அந்த வகையில் தமிழக வீரர் குகேஷ் செஸ் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் குகேஷுக்கு 1.35 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதன் அடிப்படையில் இந்திய மதிப்பில் அவர் ரூ. 11.45 கோடி ரூபாயை பெறுகிறார். அவரது போட்டியாளரான லிரென் 1.15 மில்லியன் டாலர் என்ற அடிப்படையில் சுமார் 9.75 கோடி ரூபாய் பெற்றுக் கொள்கிறார்.
இதற்கிடையே, ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கான தொகையை விடவும், குகேஷின் பரிசுத் தொகை குறைவாக இருப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குகேஷை விடவும் நடப்பு ஐபிஎல் தொடரில் 13 வீரர்கள் குகேஷ் பெற்ற தொகையை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ரிஷப் பந்த் லக்னோ அணியால் ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது குகேஷின் பரிசுத் தொகையை விடவும் சுமார் 2.5 மடங்கு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பாக குகேஷுக்கு ரூ. 5 கோடி ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ளது.