ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலம், வரும் 24, 25 ஆகிய தேதிகளில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜித்தாக்கில் துவங்கி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் 18ஆவது சீசன் எப்போது துவங்கும், பைனலுக்கான தேதி என்ன, எத்தனை போட்டிகள் என்பது குறித்து, பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. 18ஆவது சீசனுக்கான முதல் போட்டி, மார்ச் 14ஆம் தேதி துவங்கும் என்றும், மே 25ஆம் தேதி பைனல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளதாம்.
ஐபிஎல் 2022ஆம் ஆண்டில், 84 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, 2023-ல் 74 போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது 18ஆவது சீசனிலும் 74 போட்டிகள்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும், 2027ஆம் ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் 84 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அடுத்து, 2027ஆம் ஆண்டில், 94 போட்டிகள் என்ற இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளதாம்
போட்டிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டாலும், வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பை உறுதி செய்ய பிசிசிஐ தற்போதே, நடவடிக்கையை துவங்கிவிட்டது. 2027ஆம் ஆண்டு வரை, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய, தற்போதே பாகிஸ்தானை தவிர்த்து மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை பிசிசிஐ அனுகியுள்ளதாம். இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரானது, மார்ச் 15 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டில் துவங்கும் தொடர், மார்ச் 14 முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறுமாம். இந்த தேதிகளை அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் அனுப்பி, சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை, இதற்கு ஏற்றார்போல் மாற்றி, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பை உறுதி செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
2025 முதல் 2027 தொடருக்கான தேதிகளை தற்போதே அறிவித்துவிட்டதால், இந்த காலகட்டத்தில் மற்ற அனைத்து நாட்டு வீரர்களும் ஐபிஎலில் பங்கேற்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.