உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றில் குகேஷ்- நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார்.
இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் முதலில் யார் 7.5 புள்ளிகளை எடுக்கிறார்களோ அவரே உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.
இதுவரை இரண்டு சுற்றுகள் நடைபெற்ற நிலையில், முதலாவது சுற்றில் சீன வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார். தொடர்ந்து நேற்று (நவ.26) நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்நிலையில், இன்று (நவ.27) மூன்றாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இன்று 3ஆவது சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும், லிரென் கருப்பு நிறத்துடனும் விளையாடினார்கள்.
இந்தப் போட்டியில் 37ஆவது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் குகேஷ் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் குகேஷ், டிங் லிரென் இருவரும் 1.5 1.5 புள்ளிகள் என சமநிலையில் உள்ளார்கள்.
இதற்கு முன் இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்று இருந்தார். அதன் பின் 18 வயதான குகேஷ் அந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சிறப்பையும் குகேஷ் பெறுவார்.