தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். ஏற்கெனவே தமிழக அரசு ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையின் மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் இடங்களில் கூடுதலான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களும் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவை அனைத்தையும் மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். புயல் இன்று மாலை கரையைக் கடக்கூடிய நிலையில், அந்தப்பாதையையும், ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்துவருகிறார். உடன் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்காணி, சென்னை மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் இந்த ஆய்வில் உடனிருக்கின்றனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அது குறித்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.
நேற்றிரவு கடுமையான மழை பெய்தது. தொடர்ந்து பெய்தும் வருகிறது. இன்று இரவு கரையைக் கடக்கும் என செய்தி வந்துள்ளது. இந்நிலையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டோம். நிவாரணப்பணிகள் எந்த அளவுக்கு நடந்து வருகிறது என்பதையும் கேட்டு வருகிறோம். இன்று இரவு கடுமையான மழை பெய்யும் என காரணத்தால் முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களில் உள்ள பொறுப்பு அமைச்சர்களும் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். சென்னையில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. அப்படியே இருந்தாலும் சமாளித்துக்கொள்வோம்.” என தெரிவித்தார்.