விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக குறித்து பேசியது சர்ச்சையாக, கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார். அது தொடர்பாக நீண்ட அறிக்கையையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் தான் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுரை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், “இடைநீக்கம் குறித்து ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து கட்சிக்கு எதிராக, தலைமைக்கு எதிராகத் தான் உள்ளது. ஒரு கட்சிக்குள் வந்துவிட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவராக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்படுவது முக்கியமானது.
கட்சியின் நடைமுறைகளுக்கு இணங்குவது அவசியம். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதோ அல்லது கட்சியில் இருந்து அவராக வெளியேற வேண்டும் என்பதோ நம்முடைய நோக்கம் இல்லை. மேலும், ஒரு அமைப்பின் நடைமுறை பற்றிய புரிதல் ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை” எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
அதேபோல், பொதுவாழ்வில் பொறுமையும் சகிப்பு தன்மையும் மிக மிக முக்கியம். அந்த வாய்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜுனா பெறுவார் என்பதை எதிர்பார்த்தேன். ஆனால், ஆதவ் அர்ஜுனாவின் இந்த முடிவும் அவசரமானது என கூறிய திருமாவளவன், அவருக்கு பக்குவம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.