கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பொழிவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் கார்த்திகை தீபத்திற்கு தேவையான அகல் விளக்குகளை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். இதனால் சேலம் மாவட்டத்தில் அகல் விளக்குகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
லட்சுமி விளக்கு, விநாயகர் விளக்கு, தட்சண மூர்த்தி விளக்கு, குபேரர் விளக்கு, அஷ்டலக்ஷ்மி விளக்கு, துளசிமாடம் விளக்கு, ஐந்து திரி குத்து விளக்கு, நெய் விளக்கு போன்ற அகல் விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான அகல் விளக்குகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
விற்பனை குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில்; ” இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் அடை மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இருந்தபோதிலும் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் கார்த்திகை தீபத்திற்கு தேவையான அகல் விளக்குகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். நாங்கள் கடந்த வருடங்களை விட இந்த வருடம் புதுப்புது ரகங்களில், வடிவங்களில் அகல் விளக்குகளை விற்பனை செய்து வருகிறோம்.
ஒவ்வொரு அகல் விளக்குகளும் அவற்றின் அளவினையும் தரத்தினையும் பொறுத்து விற்பனையானது செய்யப்பட்டு வருகிறது. எங்களிடம் 1 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையிலான அகல் விளக்குகள் உள்ளது. மக்கள் அவரவர்களுக்கு பிடித்த அகல் விளக்குகளை தேடிப் பிடித்து வாங்கிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கின்றனர் வியாபாரிகள்.