மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு மாநகராட்சி டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னைவாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் மெரினா கடற்கரை மிகவும் பிரபலமானது. இங்கு காலை, மாலை வேளை என இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமான மக்கள் பொழுதுபோக்க வருகை தருகின்றனர். குறிப்பாக பண்டிகை, விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் குடும்பத்துடன் வருவார்கள். வார இறுதி நாட்களில் பல ஆயிரம் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரைக்கு ஆண்டுக்கு பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
மெரினா கடற்கரை உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்த நிலையில் மெரினாவில் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், அழகுப்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.
மேலும் மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை தொடங்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்ற சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0′ திட்டத்தின் கீழ், ரோப் கார் சேவை விரைவில் அமைக்கப்படும் என அறிவித்தது.
இந்த நிலையில் மெரினா ரோப் கார் சேவைக்கு கட்டுமான பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் ரோப் கார் சேவை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
அதன்படி வரும் டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் ரோப் கார் சேவை கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. திட்ட மதிப்பாய்வு, கட்டுமான வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் என விரிவான அறிக்கை உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் சென்னை மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. டெண்டர் உறுதி செய்யப்பட்ட பின்னர் அடுத்த கட்ட பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.